×

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 141 எதிர்க்கட்சி எம்பிக்களும் நாடாளுமன்ற அறை, லாபி கேலரியில் நுழைய தடை: மக்களவை செயலகம் அதிரடி அறிவிப்பு


புதுடெல்லி: சஸ்பெண்ட் செய்யப்பட்ட 141 எதிர்க்கட்சி எம்பிக்களும் நாடாளுமன்றத்தின் அறை, லாபி, கேலரியில் நுழைய தடை விதித்து மக்களவை செயலகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சிகள் மக்களவை, மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து மக்களவை உறுப்பினர்கள் 33 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல அமளியில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 45 பேர் என மொத்தம் 78 எம்பிக்கள் நேற்று முன்தினம் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த வாரம் மக்களவையில் 13 எம்பிக்கள், மாநிலங்களவையில் ஒரு எம்பி என மொத்தம் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து 2 அவைகளிலும் சேர்ந்து 92 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இதே கோரிக்கையை முன்வைத்து நேற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 49 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மொத்தம் இதுவரை 141 எதிர்க்கட்சி எம்பிக்கள் குளிர்கால கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே கூட்டத்தொடரில் 141 எம்பிக்கள் 2 அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இக்கூட்டத்தொடர் நாளை மறுநாள் (22ம் தேதி) நிறைவடையும் நிலையில், எதிர்கட்சி எம்பிக்கள் அதிகளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் வரும் 22ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

எம்பிக்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை தொடர்ந்து, மக்களவை செயலகம் மற்றொரு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக மக்களவை செயலகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘சஸ்பெண்ட் செய்யப்பட்ட 141 எம்பிக்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாடாளுமன்ற அறை, லாபி மற்றும் கேலரிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு அவை நடவடிக்கையில் பங்கேற்க முடியாது. மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள், நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டங்களிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் வழங்கப்படும் எந்த அறிவிப்பும் ஏற்கத்தக்கது அல்ல. அவர்கள் நாடாளுமன்ற குழுத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது. இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் தினசரி கொடுப்பனவு பெற உரிமை இல்லை. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் தங்கியிருக்கும் இடங்களை, பணியில் இருக்கும் இடமாக கருத முடியாது’ என்று அறிவித்துள்ளது.

The post சஸ்பெண்ட் செய்யப்பட்ட 141 எதிர்க்கட்சி எம்பிக்களும் நாடாளுமன்ற அறை, லாபி கேலரியில் நுழைய தடை: மக்களவை செயலகம் அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Parliament House ,Lok Sabha Secretariat ,New Delhi ,Parliament ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...